Posted on April 26, 2008 by arulrangan

யூசுப் பதான் மற்றும் கிரேம் சிமித் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, லக்ஸ்மனின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல். ருவென்ரி/20 போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிச் சதம் கடந்த சைமண்ட்ஸின் ஆட்டம் இறுதியில் அவரது பந்துவீச்சாலேயே வீணானது.
இந்தியன் கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ.) சார்பில் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் நடக்கின்றன. நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் லக்ஸ்மன் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ஷேன் வோர்னை அணித்தலைவராகக் கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக லக்ஸ்மன், கில்கிறிஸ்ற் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாகப் பந்துவீசிய யூசுப் பதான், கில்கிறிஸ்றை (13) வெளியேற்றி நம்பிக்கை தந்தார். அடுத்து அதிரடி அப்ரிதி வந்தார். அதே ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசிய இவர்(10) கடைசி ப்பந்தில் ஆட்டமிழந்தார். யூசுப் பதான் தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.
அடுத்துக் களமிறங்கிய சைமண்ட்ஸ் வந்த வேகத்தில் முனாப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். திரிவேதியின் பந்துவீச்சில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். மறுமுனையில் லக்ஸ்மன், வோர்னின் சுழலில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். இவர் 16 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்தார். ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சைமண்ட்ஸ் அரைச்சதம் கடந்தார்.
தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய அவர் வோர்னின் பந்தில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து இத்தொடரின் அதிவேக சதத்தைப் பதிவு செய்தார். இதற்கு இவருக்கு 47 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரோகித் சர்மா 36 ஓட்டங்களுடனும், அர்ஜூன் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்தது. சைமண்ட்ஸ் 117 ஓட்டங்களுடன் (11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கம்ரன் அக்மல்(12) விரைவில் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த யூசுப் பதான், சிமித்துடன் ஜோடி சேர்ந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி ஓட்டஎண்ணிக்கையை ரொக்கெட் வேகத்தில் உயர்த்தியது.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய யூசுப் பதான், சமிந்த வாஸ் வீசிய 5ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 22 ஓட்டங்களைச் சேர்த்தார். சிறப்பான நிலையில் இருந்த இவர் ஆர்.பி.சிங் பந்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்து கலக்கினார். 21வது பந்துகளில் 50 ஓட்டங்களைத் தொட்டு இத்தொடரின் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாட நினைத்த இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 28 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் சோபித்திருந்த ஷேன் வட்ஸன் (4) இம்முறை ஏமாற்றமளித்தார்.
அடுத்து கைவ் வந்தார். இவர் சைமண்ட்ஸ் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் அரைச்சதம் கடந்த சிமித்தும் பந்தை வரிசையாக பவுண்டரிக்கு விரட்ட ஆட்டத்தில் பரபரப்புத் தொற்றி கொண்டது. இந்த ஜோடி வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்க லக்ஸ்மன், அப்ரிதியிடம் பந்தைக் கொடுத்தார். இவரது முதல் பந்தில் கைவ் அவுட்டானார். இவர் 16 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார். அடுத்த பந்தில் சிமித்தும் (45 பந்துகளில் 71 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ராஜஸ்தான் றோயல்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் தள்ளப்பட்டது. அன்ட்ரூ சைமண்ஸ் அந்த ஓவரை வீச,அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் வோர்ன் வரிசையாக ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அணிக்கு “திரில்’ வெற்றி தேடி தந்தார். ராஜஸ்தான் றோயல்ஸ் 19.5அவது ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைப் பதிவுசெய்துதது. வோர்ன் 22 ஓட்டங்களுடனும், பங்கஜ் சிங் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக யூசுப் பதான் தெரிவானார்.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 11, 2008 by arulrangan
கடைசி வரை பரபரப்பு…. கடைசியில் இலங்கை அணிக்கு சந்தர்போல் வைத்தார் ஆப்பு. நேற்றுமுன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல்போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவிலிருந்த இலங்கை அணிக்கு கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி அடிகொடுத்தார் சந்தர்போல்.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி இரு பந்துகளிலும் 10 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் அந்த ஓவரை வீசியிருந்தார் சமிந்த வாஸ். ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க, கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டன. சமிந்த வாஸ் அந்தப் பந்தை தாழ்வாக மேலெழுப்பி வீச, அதனை உற்று அவதானித்து சிக்ஸராக விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் சந்தர்போல்.
ஒருநாள் போட்டிகளில் வரலாற்றில் கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில், அந்தப் பந்நில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையை சந்தர்போல் பெற்றுள்ளார்.
முன்னதாக, 1985ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில், அந்தப் பந்நில் சிக்ஸர் அடித்து அணியைக் கரை சேர்த்திருந்தார் பாகிஸ்தானின் ஜாவிட் மியாண்டாட்.
2006ஆம் ஆண்டு சிம்பாப்வே வீரர் பிரண்டன் ரெய்லர், பங்களாதேஷûக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றிக்கரை சேர்த்திருந்தார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரு அணிகளுக்குமிடையிலான இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப வீரர்களான கிறிஸ் கெய்லும், டெவன் சிமித்தும் நிதானமானமாக இலக்கைக் கலைக்க ஆரம்பித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் குலசேகரவின் வேகத்தில் டெவன் சிமித் 14 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
தொடர்ந்து வந்த சர்வானும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கிறிஸ் கெய்ல் 52 ஓட்டங்களுடன் (81 பந்துகள், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) அஜந்த மெண்டிஸின் சுழலில் வெளியேறினார். அடுத்த ஓவரில் குலசேகரவின் பந்துவீச்சில் சர்வான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே அடுத்துவந்த சாமுவேல்ஸும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம்புகுந்த சந்தர்போல் நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தார். அவருக்கு மறுமுனையில் வந்த வீரர்கள் சரியான ஒத்துழைப்புக் கொடுக்கத் தவறினர். பிராவோ 36 ஓட்டங்களுடனும், பிறவ்ணி 15 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
அடுத்துவந்தவர்களான டரன் சமி (1), ஜெரோமி ரெய்லர் (9), சுலைமான் பென் (0) என விரைவாக விக்கெட்டைப் பறிகொடுக்க ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் சென்றது. கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஜோடியாக சந்தர்போலும், எட்வாட்ஸும் களத்தில் இருந்தனர்.
முதல் பந்து ஓட்டமற்றதாகப் போக அடுத்த மூன்று பந்துகளிலும் மூன்று ஓட்டங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து கடைசி இரு பந்துகளிலும் முறையே பவுண்டரி, சிக்ஸர் என சந்தர்போல் விளாச சாதனைமிகுந்த வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பதிவுசெய்தது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டிருந்த இலங்கை அணி சரியான ஆரம்பத்தைப் பெறத் தவறியிருந்தது. ஆரம்ப வீரர்களான மஹேல உடவத்த ஓட்டமெதுவும் பெறாமலும், உபுல் தரங்க 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த சங்ககார 23 ஓட்டங்களுடனும், மஹேல ஜெயவர்த்தன ஒரு ஓட்டத்துடனும், டில்சான் 2 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து இலங்கை அணி.
இந்நிலையில் 6ஆவது விக்கெட்டில் ஜோடி÷ சர்ந்த சமர சில்வா மற்றும் சமார கப்புகெதர ஆகியோர் சிறப்பாக ஆடி அணியைத் தூக்கி நிறுத்தினர். இருவரும் 159 ஓட்டங்களைச் சேர்த்து அணி 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். இந்நிலையில் 67 ஓட்டங்களுடன் சமர சில்வா ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்புகெதர கடை ஓவரின் ஐந்தாவது பந்துவரை களத்தில் நின்று 95 ஓட்டங்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் அவரின் கூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 117 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் தனது ஓட்ட எண்ணிக்கையில் சேர்த்திருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களைச் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சில் பிராவோ 4 விக்கெட்டுகளையும், எட்வாட்ஸ் 2 விக்கெட்டுகளையும், ரெய்லர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணியின் முன்னணி வரிசையைத் தகர்த்தெறிந்த பிராவோ ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 7, 2008 by arulrangan

ராம்நரேஷ் சர்வான் சதம் விளாச, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 11 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமனிலைப்படுத்தியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றியது. தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டி கடந்த வியாழக்கிழமைமுதல் போர்ட் ஒவ் ஸ்பெயினில் நடைபெற்றுவந்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களையும், மேற் கிந்தியத் தீவுகள் அணி 294 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாம் இன்னிங்ஸில் சமரவீர சதம் அடித்துச் சிறப்பிக்க இலங்கை அணி 268 ஓட்டங்களைச் சேர்த்தது.
முதல் இன்னிங்ஸில் 16 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலக்கைக் கலைக்க ஆரம்பித்தது. அதிரடியாக ஆட முற்பட்ட கிறிஸ் கெய்ல் 10 ஓட்டங்களுடன் துஷாராவின் பந்துவீச்சில் டில்சானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்ப வீரரான சற்றக்கூன் 11 ஓட்டங்களுடன் வாஸின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 24 ஓட்டங்களுக்கு ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து தவித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த சர்வான் சாமுவேல்ஸ் ஆகியோர் அணியைத் தூக்கி நிறுத்த முயற்சித்தனர். இருவரும் தங்களிடையே 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த நிலையில் சாமுவேல்ஸ் 11 ஓட்டங்களுடன் வாஸின் பந்துவீச்சில் வர்ணபுரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் சர்வானுடன் ஜோடி சேர்ந்த சந்தர்போல் நம்பிக்கை தரும் விதத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தார். சர்வானும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். இந்த ஜோடியைப் பிரிக்க இலங்கைப் பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதற்கும் உடனடிப் பலன் கிடைக்கவில்லை. இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்வான் டெஸ்ட் அரங்கில் 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அவர் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முரளியின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சந்தர்போலுடன் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 157 ஓட்டங்களை சர்வான் இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து இணைந்த சந்தர்போல் சிமித் ஜோடி அணியை வெற்றிக்கரை சேர்த்தது. இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 68.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவுசெய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த சந்தர்போல் 86 ஓட்டங்களையும், சிமித் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடர் 11 என்ற சமனிலையை அடைந்தது. தொடர்ச்சியான ஏழு டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடர் ஒன்றைச் சமனிலைப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இலங்கை கோட்டைவிட்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதுகளை சர்வான் வென்றெடுத்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 7, 2008 by arulrangan
சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அவமானம். அஹமதாபாத் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சொதப்ப, தென்னாபிரிக்காவிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. பந்துவீச்சு துடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கிய தென்னாபிரிக்க அணி மூன்றே நாளில் சாதித்துக் காட்டியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் சமனிலையில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் அஹமதாபாத் நகரில் நடந்தது. தென்னாபிரிக்க வேகத்தில் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தென்னாபிரிக்கா இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்களை எடுத்திருந்து, 418 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. டீ வில்லியர்ஸ் 217 ஓட்டங்களுடனும், போல் ஹரீஸ் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்றுமுன்தினம் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மைதானத்தில் லேசான ஈரப்பதம் காணப்பட்டது. இது பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதை உணர்ந்த அணித்தலைவர் சிமித் மேலும் துடுப்பெடுத்தாட விரும்பவில்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 494 ஓட்டங்களுடன் ஆட்டத்தை “டிக்ளேயர்’ செய்தார்.
இதையடுத்து 418 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஸ்ரைன் வீசிய முதல் ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்களை அடித்து ஷேவாக் அசத்தினார். தொடர்ந்து விளாச நினைத்த இவர் நிற்னி வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து ஆட முனைந்து 17 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்து டிராவிட் வந்தார். முதல் இன்னிங்ஸில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த இவர், மீண்டுமொரு முறை பொறுப்பை உணர்ந்து விளையாட தவறி 17 ஓட்டங்களுடன் மோர்கீலின் பந்தில் மூன்றாவது சிலிப்பில் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் வசீம் ஜாபரும்(19) நடையைக் கட்ட, இந்திய அணி தோல்வியிருந்து தப்புமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஐந்தாவது வீரராக வந்த கங்குலி, லக்ஸமனுடன் ஜோடி சேர்ந்தார். தென்னாபிரிக்கப் பந்துவீச்சை ஓரளவு சமாளித்த லக்ஸ்மன், 45 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கீலின் பந்தில் பௌச்சரால் பிடியெடுக்கப்பட்டார்.
அடுத்து வந்த துணை அணித்தலைவர் டோனி, கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றது. கலிஸ் பந்தை “கவர்’ திசைக்கு விரட்டி, கங்குலி டெஸ்ட் அரங்கில் 33ஆவது அரைச்சதம் கடந்தார். இந்நிலையில் மீண்டும் பந்துவீச வந்த ஸ்ரைன் இந்தியாவின் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். இவர் கலக்கலாக விளையாடி கொண்டிருந்த கங்குலியை வெளியேற்றினார். கங்குலி 8 பவுண்டரிகள் உட்பட 87 ஓட்டங்களை எடுத்தார்.
பதான் வந்த வேகத்தில் ஹரீஸின் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய டோனி டெஸ்ட் போட்டிகளில் 9ஆவது அரைச்சதத்தைப் பதிவு செய்தார். களத்திலிருந்த கடைசித் துடுப்பாட்ட வீரரான இவரும் (52) நிற்னியின் வேகத்தில் வெளியேற, தென்னாபிரிக்காவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அணித்தலைவர் கும்ளே 5 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஹரீஸ் சுழலில் சிக்கினார்.
ஹர்பஜன் 4 ஓட்டங்களுடனும், ஆர்.பி.சிங் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 11ஆவது வீரராக வந்த சிறிசாந்த், ஸ்ரைனின் பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். இவரது ஆட்டத்தை அடுத்து வந்த நிற்னி முடித்து வைத்தார். இவர் 17 ஓட்டங்கள் எடுத்தார். பதான் 43 ஓட்டங்களுடன் (ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 328 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது. தென்னாபிரிக்கா தொடரில் 10 என்ற முன்னிலையைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் எதிர்வரும் 11ஆம் திகதி கான்பூரில் தொடங்கவுள்ளது.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 4, 2008 by arulrangan

அஹமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டீ வில்லியர்ஸ் இரட்டைச் சதம் விளாச தென்னாபிரிக்க அணி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. ஜக் கலிஸும் சதம் விளாசி அணியின் ஓட்டக்குவிப்புக்கு வலுச் சேர்த்தார்.
நேற்று நிறைவுபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்தியாவை விட 418 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 76 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது. களத்தில் நின்ற ஜக் கலிஸ் மற்றும் டீ வில்லியர்ஸ் ஆகியோர் தொடர்ந்தும் சிறப்பாக ஆடி அணியை வலுப்படுத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜக் கலிஸ் டெஸ்ட் அரங்கில் தனது 30ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து டீ வில்லியர்ஸும் தனது 5ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவுசெய்தார்.
இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 256 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஜக் கலிஸ் 132 ஓட்டங்களுடன் சிறிசாந்தின் வேகத்தில் “போல்ட்’ ஆனார். 275 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 132 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து களம்புகுந்தவர்களான மார்க் பௌச்சர் 21 ஓட்டங்களுடன் கும்ளேயின் சுழலிலும், மோனே மோர்கீல் ஓர் ஓட்டத்துடன் ஹர்பஜனின் பந்துவீச்சிலும் விரைவாக வெளியேறினர்.
எனினும், மறுமுனையில் நின்ற டீ வில்லியர்ஸ் சிறப்பாக ஆடி தனது முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அத்துடன் முதற்தரப் போட்டிகளிலும் அவர் அடிக்கும் முதல் இரட்டைச் சதம் இதுவாகும்.
ஆறாவது வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை டீ வில்லியர்ஸ் நேற்று நிலைநாட்டினார்.
மழை காரணமாக நேற்றைய ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்ட போது டீ வில்லியர்ஸ் 217 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். அவருடன் போல் ஹரீஸ் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 333 பந்துகளுக்கு முகம்கொடுத்துள்ள டீ வில்லியர்ஸ் 17 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 217 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 4, 2008 by arulrangan

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மழையால் இடைக்கிடையே குழம்பிய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதிரடியாக ஆடிவரும் திலகரட்ண டில்சான் 57 பந்துகளில் 58 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் ஓட்டக்குவிப்புக்கு உதவிபுரிந்து வருகின்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஆரம்பமானது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக இஸரா அமரசிங்கவும், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சற்றக்கூனும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தனர்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மைக்கல் வன்டோட் மலிந்த வர்ணபுர ஜோடி இலங்கை அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். முதல் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் எட்வாட்ஸின் வேகத்தில் வர்ணபுர 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம்புகுந்த குமார் சங்ககார வெறும் 10 ஓட்டங்களுடன் எட்வாட்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ராம்டீனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த மைக்கல் வன்டோட்டும் (30), எட்வாட்ஸின் வேகத்தில் சரணடைந்தார்.
இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை மழை குழப்பியது. சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 26 ஓட்டங்களுடனும், திலான் சமர வீர 6 ஓட்டங்களுடனும் ரெய்லரின் வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் 5ஆம் விக்கெட்டில் ஜோடி சேர்ந்த திலகரட்ண டில்சான் மற்றும் சமர சில்வா ஆகியோர் அணியைத் தூக்கி நிறுத்தக் கடுமையாகப் போராடினர். டில்சான் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிக்க மறுமுனையில் சமர வீர பொறுமையாக ஆடினார். சிறப்பாக ஆடிய டில்சான் அரைச்சதம் அடித்து அசத்தினார்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டபோது முதல்நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 46.3 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டில்சான் 58 ஓட்டங்களுடனும், சமரசில்வா 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவிருந்தது.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 3, 2008 by arulrangan
Posted on April 3, 2008 by arulrangan
Posted on April 3, 2008 by arulrangan

தென்னாபிரிக்க வேகங்கள் அச்சுறுத்த நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கதை வெறும் 20 ஓவர்களுக்குள் 76 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. முன்வரிசை வீரர்கள் ஐவரும் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையில் விக்கெட்டைப் பறிகொடுத்து பவிலியன் திரும்பினர். முதல் டெஸ்ட் டில் முச்சதம் விளாசிய ஷேவாக் வெறும் 6 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுகின்றது. தொடரின் முதல் போட்டி சமனிலையில் முடிவடைந்திருந்தது. இரண்டாவது போட்டி நேற்று அஹமதாபாத்தில் ஆரம்பமானது. காயமடைந்த சச்சினுக்குப் பதிலாக இர்பான் பதான் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்ப வீரர்களாக வழமைபோல் ஜாபரும், ஷேவாக்கும் களமிறங்கினார்கள். நான்காவது ஓவரில் இந்தியாவுக்கு இடி விழ ஆரம்பித்தது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் வசீம் ஜாபர் வெறும் 9 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஷேவாக் 6 ஓட்டங்களுடன் ஸ்ரைனின் வேகத்தில் “போல்ட்’ ஆனார். அணியைக் காப்பாற்றும் பொறுப்புடன் களமிறங்கிய டிராவிட்டும் ஸ்ரைனின் வேகத்தில் “போல்ட்’ ஆனார்.
தொடர்ந்து களம்புகுந்த லக்ஸ்மன் (3), கங்குலி (0) ஆகியோர் மக்காயா நிற்னியின் வேகத்தில் “போல்ட்’ ஆகினர். தொடர்ந்து வந்த வீரர்கள் அணியைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கவில்லை. தென்னாபிரிக்க வேகங்கள் போட்டுத்தாக்க இந்திய அணி வெறும் 20 ஓவர்களுக்குள் 76 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பதான் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும், டோனி 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களைத் தவிர மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் டேல் ஸ்ரைன் 5 விக்கெட்டுகளையும், மக்காயா நிற்னி 3 விக்கெட்டுகளையும், மோனே மோர்கீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
சொந்த மண்ணில் இந்தியா பெற்ற இரண்டாவது குறைந்தபட்ச ஓட்டஎண்ணிக்கை இதுவாகும். 1987ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற போட்டியொன்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா 75 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமையே சொந்த மண்ணில் அந்த அணியின் குறைந்தபட்ச ஓட்டஎண்ணிக்கையாக உள்ளது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு சிமித் மக்கென்ஸி ஜோடி சிறப்பான ஆரம்பத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் சிமித் 34 ஓட்டங்களுடன் சிறிசாந்தின் வேகத்தில் சரணடைந்தார். தொடர்ந்து மக்கென்ஸி 42 ஓட்டங்களுடனும், ஹசீம் அம்லா 16 ஓட்டங்களுடனும், அஸ்வெல் பிரின்ஸ் 2 ஓட்டங்களுடனும் ஹர்பஜனின் சுழலில் வெளியேறினர்.
எனினும், 5ஆவது விக்கெட்டில் இணைந்த ஜக் கலிஸ் டீ வில்லியர்ஸ் ஜோடி மேலதிக விக்கெட் இழப்பை நேற்றுத் தடுத்தது. இந்த ஜோடி தம்மிடையே 106 ஓட்டங்களை இதுவரை இணைப்பாட்டமாகப் பெற்றுள்ளது. கலிஸ் 60 ஓட்டங்களுடனும், டீ வில்லியர்ஸ் 59 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாபிரிக்கா தற்போது முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடரும்.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 1, 2008 by arulrangan
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான துடுப்பாட்டத் தர வரிசையில் இந்திய வீரர் ஷேவாக் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் குமார் சங்ககார தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கின்றார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய தொடக்க வீரரான ஷேவாக், 13 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் அவர் தான் முதல் இடத்தில் உள்ளார். அவர் முதல் 10 இடத்துக்குள் முன்னேற வாய்ப்பு உள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததுடன் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த டிராவிட் 2 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெண்டுல்கர் 3 இடங்கள் பின்தங்கி 15ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்க அணி வீரர்கள் ஹசீம் அம்லா 10 இடங்கள் முன்னேறி 24ஆவது இடமும், மக்கன்ஸி 26 இடங்கள் முன்னேற்றம் கண்டு 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் கும்ளே 10ஆவது இடத்தில் இருக்கிறார். ஹர்பஜன்சிங் 24ஆவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை:
குமார் சங்ககாரா(இலங்கை),மைக்கல் ஹசே ( ஆஸி.), பொண்டிங்(ஆஸி.),முகமது யூசுப் (பாக்.), ஜக் கலிஸ் (தெ.ஆ.), மத்தியூ ஹைடன்(ஆஸி.), மஹேல ஜெயவர்த்தன (இலங்கை), யுனிஸ்கான் (பாக்.), சந்தர்போல் (மேற்.தீவு), பீற்றர்ஸன் (இங்கி.)
பந்துவீச்சாளர்களுக்கான பட்டியல்:
முரளிதரன் (இலங்கை), டேல் ஸ்ரைன் (தென்.ஆ.), ஸ்ருவேட் கிளார்க் (ஆஸி.), பிரட் லீ (ஆஸி.), நிற்னி (தெ.ஆ.), கும்ளே (இந்தியா), சமிந்த வாஸ் (இலங்கை), ஷோன் பொண்ட் (நியூஸி.), சொய்ப் அக்தர் (பாக்.), சைட்பொற்றம் (இங்கி.)
Filed under: Uncategorized | Leave a Comment »