மிர்பூர், ஜூன் 09
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்புத் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் சல்மான் பட் அரைச்சதம் கடக்க, பங்களாதேஷ் அணியை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பங்களாதேஷில் நேற்று ஆரம்பமான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று மிர்பூரில் நடந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. மழை காரணமாக 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு கம்ரன் அக்மல், சல்மான் பட் ஆகியோர் இணைந்து சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அப்துர் ரசாக் சுழலில் ஒரு சிக்ஸர் அடித்த கம்ரன் அக்மல் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த யுனிஸ்கான்(0) பரிதாபமாக “ரன் அவுட்’ ஆனார். தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்த சல்மான் பட் 70 ஓட்டங்களுடன் (10 பவுண்டரிகள்) பவிலியன் திரும்பினார்.
பின்னர் பொறுப்பாக ஆடிய முகமது யூசுப் அரைச்சதம் விளாசினார். “அதிரடி’ அப்ரிடி (20), அலொக் கபாலியின் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் யூசுப்பையும்(59), வெளியேற்றிய கபாலி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடைசிக் கட்டத்தில் மிஸ்பாஉல்ஹக் அதிரடியாக விளையாடினார். இவர் 39 ஓட்டங்களுடன் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 233 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
கடின இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணி திணறல் தொடக்கம் கண்டது. நபீஸ்(9), ரகீபுல் ஹசன்(8) விரைவாக வெளியேறினர். அடுத்து வந்தவர்கள் அப்ரிடியின் சுழலில் சிக்கினர். மனம் தளராமல் போராடிய அணித்தலைவர் அஷ்ரபுல் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பங்களாதேஷ் அணி 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக சல்மான் பட் தெரிவானார்.
முத்தரப்புத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பகலிரவுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகின்றது.
Filed under: Uncategorized



