தொடரை வென்றது இங்கிலாந்து அணி

arulrangan 01

டிரன்ட்பிரிட்ஜ், ஜூன் 09
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் தொடரை 20 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் சைட்பொற்றம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரன்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 364 ஓட்டங்களையும், நியூஸிலாந்து 123 ஓட்டங்களையும் எடுத்தன. “பலோஒன்’ பெற்ற நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் சைட்பொற்றத்தின் வேகத்தில் நியூஸிலாந்து வீரர்கள் திணறிப் போயினர். இவரது பந்துவீச்சில் ஹோப்கிங்ஸ்(12), வெட்ரோறி(1), மில்ஸ்(2), ஒபிரைன் (4) என வரிசையாக வெளியேறினார்கள்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜேக்கப் ஒரம் 39 பந்துகளில் அரைச்சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக கிறிஸ் மாட்டினின் (0) விக்கெட்டை அன்டர்ஸன் வீழ்த்த நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 232 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அபாரமாகப் பந்து வீசிய சைட்பொற்றம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 20 என்ற கணக்கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் அன்டர்ஸன் தெரிவானார். தொடர் நாயகன் விருது இங்கிலாந்தின் அன்ட்ரூ ஸ்ரோரஸுக்கும், நியூஸிலாந்தின் டானியல் வெட்ரோறிக்கும் இணைத்து வழங்கப்பட்டது.
டெஸ்ட் தொடர் முடிவுற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அதற்கிடையில் இரு அணிகளும் எதிர்வரும் 13ஆம் திகதி ருவென்ரி/20 போட்டியில் மோதவுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.