லண்டன், ஜூன் 6
இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் போட்டியொன்றில் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் ரவி போபரா.
இதன்மூலம் 50 ஓவர் போட்டியொன்றில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் எஸெக்ஸ் பிராந்திய அணி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கவுண்டிப் போட்டிகளில் 7 வீரர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை இந்தச் சாதனை நிலைநாட்டப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வீரர் பெற்ற 194 ஓட்டங்களே, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட தனிநபர் அதிகூடிய ஓட்டஎண்ணிக்கையாகும்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற லெய்செஸ்ரர்ஸெயார் அணிக்கு எதிரான தொடரின் காலிறுதிப் போட்டியிலேயே எஸெக்ஸ் அணி வீரரான போபரா இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
முதலில் ஆடிய எஸெக்ஸ் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ஓட்டங்களைக் குவித்தது. 4ஆவது வீரராகக் களமிறங்கிய போபரா, தொடக்கத்திலிருந்தே அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரது முதல் 100 ஓட்டங்கள் 85 பந்துகளில் பெறப்பட்டன. அடுத்த 100 ஓட்டங்களும் வெறும் 52 பந்துகளில் மட்டுமே பெறப்பட்டது. கடைசி 50 ஓட்டங்களை 16 பந்துகளில் விளாசியிருந்தார். 195 ஓட்டங்களிலிருந்து சிக்ஸர் அடித்து அவர் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த போபரா, 138 பந்துகளில் 201 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார். அவரது ஓட்டஎண்ணிக்கையில் 18 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்குகின்றன.
பதிலளித்து ஆடிய லெய்செஸ்ரர்ஸெயார் அணி 41 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
Filed under: Uncategorized


