ஐ.சி.சியின் தரவரிசையில் சந்தர்போல் முன்னேற்றம்

டுபாய், ஜூன் 06
சர்வதேச கிரிக்கெட் சபையின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சந்தர்போல் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக தரவரிசையில் சிறந்த நிலையை அடைந்துள்ளார் சந்தர்போல்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பிரகாசித்துவரும் சந்தர்போல், 8ஆவது நிலையிலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
அன்டிகுவாவில் நடைபெற்ற ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமலிருந்த சந்தர்போல் முறையே 107 மற்றும் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்திருந்தார். கிங்ஸ்ரனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அவர் 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார். நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் அவரது தற்போதைய சராசரி 156.50 ஆகும். இவ்வாறு அவர் வெளிப்படுத்தி வரும் திறமைகள், அவரைத் தரவரிசையில் முன்னேற்றம் அடையச் செய்துள்ளன.
கடந்த 12 மாதங்களில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சந்தர்போல்,106.20 என்ற சராசரிக்கு 1062 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் ஐந்து சதங்களும் அடங்கும்.
நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட புதிய துடுப்பாட்டத் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசே 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றார். பந்துவீச்சாளர் தரவரிசையில் முரளிதரன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பிரகாசித்துவரும் பிரட் லீ 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்தோர் விவரம் வருமாறு:
மைக்கல் ஹசே (911 புள்ளிகள்), ரிக்கி பொண்டிங் (895 ), குமார் சங்ககார (893), முகமது யூசுப் (880), சந்தர்போல் (877), ஜக்கலிஸ் (877), மத்தியூ ஹைடன் (843), மஹேல ஜெயவர்த்தன (810), யுனிஸ்கான் (799), பீற்றர்ஸன் (750).
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடி த்தோர் விவரம் வருமாறு:
முரளிதரன் (897 புள்ளிகள்), டேல் ஸ்ரைன் (892 ), ஸ்ருவேட் கிளார்க் (854), பிரட் லீ (811), மக்காயா நிற்னி (777), சைட்பொற்றம் (719), சமிந்த வாஸ் (709), அனில் கும்ளே (708), சொய்ப் அக்தர் (684), ஷேன் பொண்ட் (675). 

Leave a Reply

You must be logged in to post a comment.