ராஜஸ்தான் றோயல்ஸிடம் வீழ்ந்தது லக்ஸ்மனின் அணி

யூசுப் பதான் மற்றும் கிரேம் சிமித் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, லக்ஸ்மனின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல். ருவென்ரி/20 போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிச் சதம் கடந்த சைமண்ட்ஸின் ஆட்டம் இறுதியில் அவரது பந்துவீச்சாலேயே வீணானது.
இந்தியன் கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ.) சார்பில் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் நடக்கின்றன. நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் லக்ஸ்மன் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ஷேன் வோர்னை அணித்தலைவராகக் கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக லக்ஸ்மன், கில்கிறிஸ்ற் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாகப் பந்துவீசிய யூசுப் பதான், கில்கிறிஸ்றை (13) வெளியேற்றி நம்பிக்கை தந்தார். அடுத்து அதிரடி அப்ரிதி வந்தார். அதே ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசிய இவர்(10) கடைசி ப்பந்தில் ஆட்டமிழந்தார். யூசுப் பதான் தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.
அடுத்துக் களமிறங்கிய சைமண்ட்ஸ் வந்த வேகத்தில் முனாப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். திரிவேதியின் பந்துவீச்சில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். மறுமுனையில் லக்ஸ்மன்,  வோர்னின் சுழலில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். இவர் 16 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்தார். ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சைமண்ட்ஸ் அரைச்சதம் கடந்தார்.
தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய அவர் வோர்னின் பந்தில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து இத்தொடரின் அதிவேக சதத்தைப் பதிவு செய்தார். இதற்கு இவருக்கு 47 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரோகித் சர்மா 36 ஓட்டங்களுடனும், அர்ஜூன் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்தது. சைமண்ட்ஸ் 117 ஓட்டங்களுடன் (11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கம்ரன் அக்மல்(12) விரைவில் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த யூசுப் பதான், சிமித்துடன் ஜோடி சேர்ந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி ஓட்டஎண்ணிக்கையை ரொக்கெட் வேகத்தில் உயர்த்தியது.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய யூசுப் பதான், சமிந்த வாஸ் வீசிய 5ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 22  ஓட்டங்களைச் சேர்த்தார். சிறப்பான நிலையில் இருந்த இவர் ஆர்.பி.சிங் பந்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்து கலக்கினார். 21வது பந்துகளில் 50 ஓட்டங்களைத் தொட்டு இத்தொடரின் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாட நினைத்த இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 28 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் சோபித்திருந்த ஷேன் வட்ஸன் (4) இம்முறை ஏமாற்றமளித்தார்.
அடுத்து கைவ் வந்தார். இவர் சைமண்ட்ஸ் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் அரைச்சதம் கடந்த சிமித்தும் பந்தை வரிசையாக பவுண்டரிக்கு விரட்ட ஆட்டத்தில் பரபரப்புத் தொற்றி கொண்டது. இந்த ஜோடி வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்க லக்ஸ்மன்,  அப்ரிதியிடம் பந்தைக் கொடுத்தார். இவரது முதல் பந்தில் கைவ் அவுட்டானார். இவர் 16 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார். அடுத்த பந்தில் சிமித்தும் (45 பந்துகளில் 71 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ராஜஸ்தான் றோயல்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் தள்ளப்பட்டது. அன்ட்ரூ சைமண்ஸ் அந்த ஓவரை வீச,அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் வோர்ன் வரிசையாக ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அணிக்கு “திரில்’ வெற்றி தேடி தந்தார். ராஜஸ்தான் றோயல்ஸ் 19.5அவது ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைப் பதிவுசெய்துதது. வோர்ன் 22 ஓட்டங்களுடனும், பங்கஜ் சிங் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக யூசுப் பதான் தெரிவானார்.

Leave a Reply

You must be logged in to post a comment.