சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மரணஅடி தென்னாபிரிக்காவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அவமானம். அஹமதாபாத்  இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சொதப்ப, தென்னாபிரிக்காவிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. பந்துவீச்சு துடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கிய தென்னாபிரிக்க அணி மூன்றே நாளில் சாதித்துக் காட்டியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் சமனிலையில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் அஹமதாபாத் நகரில் நடந்தது. தென்னாபிரிக்க வேகத்தில் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தென்னாபிரிக்கா இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்களை எடுத்திருந்து, 418 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. டீ வில்லியர்ஸ் 217 ஓட்டங்களுடனும், போல் ஹரீஸ் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்றுமுன்தினம் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மைதானத்தில் லேசான ஈரப்பதம் காணப்பட்டது. இது பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதை உணர்ந்த அணித்தலைவர் சிமித் மேலும் துடுப்பெடுத்தாட விரும்பவில்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 494 ஓட்டங்களுடன் ஆட்டத்தை “டிக்ளேயர்’ செய்தார்.
இதையடுத்து 418 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஸ்ரைன் வீசிய முதல் ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்களை அடித்து ஷேவாக் அசத்தினார். தொடர்ந்து விளாச நினைத்த இவர் நிற்னி வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து ஆட முனைந்து 17 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்து டிராவிட் வந்தார். முதல் இன்னிங்ஸில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த இவர், மீண்டுமொரு முறை பொறுப்பை உணர்ந்து விளையாட தவறி 17 ஓட்டங்களுடன் மோர்கீலின் பந்தில் மூன்றாவது சிலிப்பில் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் வசீம் ஜாபரும்(19) நடையைக் கட்ட, இந்திய அணி தோல்வியிருந்து தப்புமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஐந்தாவது வீரராக வந்த கங்குலி, லக்ஸமனுடன் ஜோடி சேர்ந்தார். தென்னாபிரிக்கப் பந்துவீச்சை ஓரளவு சமாளித்த லக்ஸ்மன், 45 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கீலின் பந்தில் பௌச்சரால்  பிடியெடுக்கப்பட்டார்.
அடுத்து வந்த துணை அணித்தலைவர் டோனி, கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றது. கலிஸ் பந்தை “கவர்’ திசைக்கு விரட்டி, கங்குலி டெஸ்ட் அரங்கில் 33ஆவது அரைச்சதம் கடந்தார். இந்நிலையில் மீண்டும் பந்துவீச வந்த ஸ்ரைன் இந்தியாவின் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். இவர் கலக்கலாக விளையாடி கொண்டிருந்த கங்குலியை வெளியேற்றினார். கங்குலி 8 பவுண்டரிகள் உட்பட 87 ஓட்டங்களை எடுத்தார்.
பதான் வந்த வேகத்தில் ஹரீஸின் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய டோனி டெஸ்ட் போட்டிகளில் 9ஆவது அரைச்சதத்தைப் பதிவு செய்தார். களத்திலிருந்த கடைசித் துடுப்பாட்ட வீரரான இவரும் (52) நிற்னியின் வேகத்தில் வெளியேற, தென்னாபிரிக்காவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அணித்தலைவர் கும்ளே 5 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஹரீஸ் சுழலில் சிக்கினார்.
ஹர்பஜன் 4 ஓட்டங்களுடனும், ஆர்.பி.சிங் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 11ஆவது வீரராக வந்த சிறிசாந்த், ஸ்ரைனின் பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். இவரது ஆட்டத்தை அடுத்து வந்த நிற்னி முடித்து வைத்தார். இவர் 17 ஓட்டங்கள் எடுத்தார். பதான் 43 ஓட்டங்களுடன் (ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 328 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது. தென்னாபிரிக்கா தொடரில் 10 என்ற முன்னிலையைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் எதிர்வரும் 11ஆம் திகதி கான்பூரில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.