சர்வானின் சதத்தின் உதவியுடன் தொடரை சமனிலைப்படுத்தியது மேற்கிந்தியத் தீவுகள்

ராம்நரேஷ் சர்வான் சதம் விளாச, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 11 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமனிலைப்படுத்தியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றியது. தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டி கடந்த வியாழக்கிழமைமுதல் போர்ட் ஒவ் ஸ்பெயினில் நடைபெற்றுவந்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களையும், மேற் கிந்தியத் தீவுகள் அணி 294 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாம் இன்னிங்ஸில் சமரவீர சதம் அடித்துச் சிறப்பிக்க இலங்கை அணி 268 ஓட்டங்களைச் சேர்த்தது.
முதல் இன்னிங்ஸில் 16 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலக்கைக் கலைக்க ஆரம்பித்தது. அதிரடியாக ஆட முற்பட்ட கிறிஸ் கெய்ல் 10 ஓட்டங்களுடன் துஷாராவின் பந்துவீச்சில் டில்சானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்ப வீரரான சற்றக்கூன் 11 ஓட்டங்களுடன் வாஸின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 24 ஓட்டங்களுக்கு ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து தவித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த சர்வான்  சாமுவேல்ஸ் ஆகியோர் அணியைத் தூக்கி நிறுத்த முயற்சித்தனர். இருவரும் தங்களிடையே 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த நிலையில் சாமுவேல்ஸ் 11 ஓட்டங்களுடன் வாஸின் பந்துவீச்சில் வர்ணபுரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் சர்வானுடன் ஜோடி சேர்ந்த சந்தர்போல் நம்பிக்கை தரும் விதத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தார். சர்வானும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். இந்த ஜோடியைப் பிரிக்க இலங்கைப் பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதற்கும் உடனடிப் பலன் கிடைக்கவில்லை. இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்வான் டெஸ்ட் அரங்கில் 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அவர் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முரளியின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சந்தர்போலுடன் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 157 ஓட்டங்களை சர்வான் இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து இணைந்த சந்தர்போல்  சிமித் ஜோடி அணியை வெற்றிக்கரை சேர்த்தது. இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 68.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவுசெய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த சந்தர்போல் 86 ஓட்டங்களையும், சிமித் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடர் 11 என்ற சமனிலையை அடைந்தது. தொடர்ச்சியான ஏழு டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடர் ஒன்றைச் சமனிலைப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இலங்கை கோட்டைவிட்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதுகளை சர்வான் வென்றெடுத்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.