டீ வில்லியர்ஸ் இரட்டைச் சதம்; கலிஸ் சதம்
அஹமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டீ வில்லியர்ஸ் இரட்டைச் சதம் விளாச தென்னாபிரிக்க அணி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. ஜக் கலிஸும் சதம் விளாசி அணியின் ஓட்டக்குவிப்புக்கு வலுச் சேர்த்தார்.
நேற்று நிறைவுபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்தியாவை விட 418 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 76 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது. களத்தில் நின்ற ஜக் கலிஸ் மற்றும் டீ வில்லியர்ஸ் ஆகியோர் தொடர்ந்தும் சிறப்பாக ஆடி அணியை வலுப்படுத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜக் கலிஸ் டெஸ்ட் அரங்கில் தனது 30ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து டீ வில்லியர்ஸும் தனது 5ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவுசெய்தார்.
இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 256 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஜக் கலிஸ் 132 ஓட்டங்களுடன் சிறிசாந்தின் வேகத்தில் “போல்ட்’ ஆனார். 275 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 132 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து களம்புகுந்தவர்களான மார்க் பௌச்சர் 21 ஓட்டங்களுடன் கும்ளேயின் சுழலிலும், மோனே மோர்கீல் ஓர் ஓட்டத்துடன் ஹர்பஜனின் பந்துவீச்சிலும் விரைவாக வெளியேறினர்.
எனினும், மறுமுனையில் நின்ற டீ வில்லியர்ஸ் சிறப்பாக ஆடி தனது முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அத்துடன் முதற்தரப் போட்டிகளிலும் அவர் அடிக்கும் முதல் இரட்டைச் சதம் இதுவாகும்.
ஆறாவது வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை டீ வில்லியர்ஸ் நேற்று நிலைநாட்டினார்.
மழை காரணமாக நேற்றைய ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்ட போது டீ வில்லியர்ஸ் 217 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். அவருடன் போல் ஹரீஸ் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 333 பந்துகளுக்கு முகம்கொடுத்துள்ள டீ வில்லியர்ஸ் 17 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 217 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்.
Filed under: Uncategorized



