நியூஸிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் வலுவான நிலையில் இங்கிலாந்து
நேப்பியர், மார்ச் 25
அன்ட்ரூ ஸ்ரோரஸ் மற்றும் இயன் பெல் ஆகியோர் சதம் அடித்துச் சிறப்பிக்க நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையைப் பெற்றுள்ளது. நேற்று நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இயன் பெல் 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஸ்ரோரஸ் 173 ஓட்டங்களுடன் களத்தில் நம்பிக்கை தருகின்றார்.
முதல் இன்னிங்ஸில் 85 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி தற்போது 501 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தாங்கள் துடுப்பெடுத்தாடமல் நியூஸிலாந்தை துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ஓட்டங்களுடன் இங்கிலாந்து ஆரம்பித்தது. ஸ்ரோரஸ் 42 ஓட்டங்களுடனும், பீற்றர்ஸன் 7 ஓட்டங்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த பீற்றர்ஸன் 34 ஓட்டங்களுடன் வெட்ரோறியின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
தொடர்ந்து அன்ட்ரூ ஸ்ரோரஸுடன் இணைந்தார் இயன் பெல். இருவரும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். நியூஸிலாந்துப் பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியைப் பிரிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் எதற்கும் உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை. 226 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரோரஸ், டெஸ்ட் அரங்கில் தனது 11ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அடுத்த சில நிமிடங்களில் 150 பந்துகளை எதிர்கொண்ட இயன்பெல் டெஸ்ட் அரங்கில் தனது 7ஆவது சதத்தை நிறைவுசெய்தார்.
இந்த ஜோடி தம்மிடையே 187 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த நிலையில் இயன் பெல் 110 ஓட்டங்களுடன் வெட்ரோறியின் சுழலில் வெளியேறினார். 167 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளையும் தனது ஓட்ட எண்ணிக்கையில் சேர்த்திருந்தார். தொடர்ந்து களம் புகுந்த அணித்தலைவர் கொலிங்வூட் 22 ஓட்டங்களுடன் வெட்ரோறியின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
எனினும், மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிவரும் அன்ட்ரூ ஸ்ரோரஸ் நேற்றைய ஆட்டநேர முடிவில் 173 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். அவருக்கு ஒத்துழைப்புக்கொடுத்துவரும் அம்பு ரோஸ் 28 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
நேற்று நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடரும்.
Filed under: Uncategorized



