பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

கராச்சி, மார்ச் 22
பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை அணி அங்கு சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.
கடந்த வாரம் லாகூரில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தமையத் தொடர்ந்து பாகிஸ்தானில் மார்ச் 29ஆம் திகதிமுதல் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா  தள்ளி வைத்தது. இந்தத் தொடர் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது முடிவாகவில்லை. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பங்களாதேஷ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகளை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. தொடர்ந்து போட்டிகள் இருப்பதால் அது சாத்தியமில்லை என்று இந்தியக் கிரிக்கெட் சபை மறுத்து விட்டது.
பங்களாதேஷ் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு ருவென்ரி/20 போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது. பங்களாதேஷ் அணி ஏப்ரல் 6ஆம் திகதிமுதல் 22ஆம் திகதி வரை பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அணியும், பாகிஸ்தான் செல்ல சம்மதித்திருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸீம் அஷ்ரப், இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் ரணதுங்கா ஆகியோருக்கிடையிலான பேச்சு வெற்றிகரமாக முடிந்திருக்கின்றன.
தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடி வரும் இலங்கை அணி, அந்தச் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு பாகிஸ்தான் செல்கிறது. ஏப்ரல் 23ஆம் திகதிமுதல் மே 5ஆம் திகதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி பங்கேற்க இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.