இலங்கை மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Two Teams Captions

கயானா, மார்ச் 22
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கயானா விளையாட்டரங்கில் தொடங்கவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கவிருக்கின்றது.
இலங்கைக் கிரிக்கெட் அணி மஹேல ஜெயவர்த்தன தலைமையில் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சில் சமபலத்தில் காணப்படுகின்றது. டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சியின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள குமார் சங்ககாரவை தன்னகத்தே கொண்டுள்ள இலங்கை அணி மேலும் பல சிறந்த வீரர்களையும் அணிக்குள் உள்ளடக்கியுள்ளது.
கயானா தலைவர் தெரிவு அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சியாட்டத்தில் சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாம் இன்னிங்ஸில் அரைச்சதமும் அடித்த ஆரம்ப வீரரான மலிந்த வர்ணபுர, இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்கப் போராடுவார் என எதிர்பார்க்கலாம். அவருக்குக் கைகொடுக்க மற்றொரு ஆரம்ப வீரரான மைக்கல் வன்டோட்டும் காத்திருக்கின்றார். தொடர்ந்து களம்புகுந்து அணியின் தேவைக்கேற்ப ஆட குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன, திலகரட்ண டில்சான், திலான் சமரவீர, பிரசன்ன ஜெயவர்த்தன ஆகியோர் அணியில் உள்ளனர்.
வேகப் பந்துவீச்சில் எதிரணியை மிரட்ட சமிந்த வாஸ், இஸரா அமரசிங்க, நுவான் குலசேகர, சானக்க வெலிகெதர ஆகியோர் காத்திருக்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பமாக அமையவுள்ள முரளிதரனின் சுழல் பந்துவீச்சு வெற்றிக்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுமுனையில் கிறில் கெய்ல் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணில் அசத்தக் காத்திருக்கின்றது. அந்த அணிக்குத் துடுப்பாட்டத்தில் கைகொடுக்க சந்தர்போல், சர்வான், சாமுவேல்ஸ், டனிஷ் ராம்டீன் ஆகியோர் உள்ளனர். அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்க அணித்தலைவர் கிறிஸ் கெயல் முயல்வார் என்பதில் ஐயமிருக்காது.
பந்துவீச்சில் இலங்கையணியை அச்சுறுத்த பிடல் எட்வாட்ஸ், டரன் பவல், பெட்ரோ கொலின்ஸ், ஜெரோமி ரெய்லர் ஆகியோர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோரின் சுழல் பந்துவீச்சும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். டவயினி பிராவோவின் சகலதுறை ஆட்டத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இரு அணிகளும் சமபலத்தை கொண்டுள்ளமையால் ஒவ்வொரு போட்டியிலும் முன்னரே வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க முடியாதுள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். சொந்த மண்ணில் விளையாடுவது மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு பலமளிப்பதாக இருக்கின்றது.
இரு அணிகளும் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளன. அவற்றில் 5 போட்டிளில் இலங்கை அணியும், 2 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றிபெற்றுள்ளன. மிகுதி மூன்று போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்துள்ளன. எனினும், மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இலங்கை அணி இதுவரை டெஸ்ட் போட்டி ஒன்றைக்கூடி வென்றதில்லை. அங்கு நடந்த 4 போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.