குலசேகர

அடிவாங்கிய இலங்கைக்கு ஆறுதல்
இறுதிக்கு நுழைந்த ஆஸி. சறுக்கல்

மெல்போர்ண், மார்ச் 01
கொமன்வெல்த் பாங்க் முத்தரப்புத் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அடிகொடுத்த இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
மெல்போர்ணில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் 222 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 208 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. ஆரம்ப வீரர்கள் சரியான அடித்தளம் அமைத்துக்கொடுத்த போதும் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடாதமையால் ஆஸி. அணி தோல்வி அடைய நேரிட்டது. ஆரம்ப விக்கெட்டுக்காக கில்கிறிஸ்ற்  ஹோப்ஸ் ஜோடி 107 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது. கில்கிறிஸ்ற் 83 ஓட்டங்களுடனும், ஹோப்ஸ் 28 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
தொடர்ந்து வந்தவர்களான பொண்டிங் ஓர் ஓட்டத்துடனும், மைக்கல் கிளார்க் மற்றும் சைமண்ஸ் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமலும், ஹசே 5 ஓட்டங்களுடனும், பிரட் ஹடின் 7 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
கடைசியில் போராடிய பிரட் லீ 37 ஓட்டங்களுடன் 48.1ஆவது ஓவரில் இறுதி விக்கெட்டாக ஜெயசூரியாவால் “போல்ட்’ செய்யப்பட ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 208 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அமரசிங்க 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் மற்றும் குலசேகர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மலிங்க, கப்புகெதர, ஜெயசூரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. அணிக்கு இம்முறையும் சரியான ஆரம்பம் கிடைக்கவில்லை. ஆரம்ப வீரர்களான டில்ருவான் பெரேரா 5 ஓட்டங்களுடனும், ஜெயசூரியா 23 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அடுத்துவந்த சங்ககார வெறும் 11 ஓட்டங்களுடன் ஜோன்ஸனின் வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கப்புகெதர (2) இம்முறை ஏமாற்றினார். 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து தவித்தது.
5ஆவது விக்கெட்டில் இணைந்த மஹேல  டில்சான் ஜோடி நிதானமாக ஆடி அணியைத் தூக்கி நிறுத்தியது. இருவரும் தம்மிடையே 64 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் 44ஆவது ஒருநாள் அரைச்சதத்தை நிறைவுசெய்திருந்த மஹேல, ஹொக்கின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து சமர சில்வாவுடன் இணைந்த டில்சான், விக்கெட்டுகளுக்கிடையில் விரைவாக ஓடி ஓட்டங்களைச் சேர்த்தார். இந்த ஜோடி 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த நிலையில் டில்சான் 62 ஓட்டங்களுடன் “ரன் அவுட்’ ஆனார். 70 பந்துகளைச் சந்தித்த அவர் 3 பவுண்டரிகளையும் தனது ஓட்ட எண்ணிக்கையில் சேர்த்திருந்தார். சமர சில்வா 35 ஓட்டங்களுடன் பிரக்கனின் வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
மலிங்க ஓட்டமெதுவும் பெறாமலும், முரளிதரன் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இன்னிங்ஸ் 50 ஓவர்கள் நிறைவில் 221 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
ஆஸி. அணியின் பந்துவீச்சில் பிரக்கன் 4 விக்கெட்டுகளையும், பிரட் லீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தின் நாயகனாக கில்கிறிஸ்ற் தெரிவனார்.
முத்தரப்புத் தொடரின் இறுதியாட்ட வாய்ப்பை இலங்கை அணி ஏற்கனவே இழந்திருந்தமை தெரிந்தே.

Leave a Reply

You must be logged in to post a comment.