பங்காளதேஷுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: யூசுப் சதம்; பாகிஸ்தான் அபார வெற்றி
பங்காளதேஷûக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகமட் யூசுப் ஆட்டமிழக்காமல் பெற்ற 108 ஓட்டங்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாகவிருந்தது.
பாகிஸ்தான் பங்காளதேஷ் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்றுமுன்தினம் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் நஸீர் ஜம்ஷட் 20 ஓட்டங்களிலும், யுனிஸ்கான் ஒரு ஓட்டத்திலும் சல்மான் பட் 33 ஓட்டங்களிலும் விரைவாக ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்கள் என்ற நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணியை, 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொகமட் யூசுப்பும், அணித்தலைவர் சொய்ப் மலிக்கும் காப்பாற்றினார்கள். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்காக 145 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. சொய்ப் மலிக் 85 ஓட்டங்களில் (75 பந்து,7 பவுண்டரி) வெளியேறினார்.
இதன் பின்னர் மிஸ்பா உல் ஹக், அப்ரிடியின் அதிரடியாட்டம் பாகிஸ்தான் 300 ஓட்டங்களை கடக்க உதவிகரமாக இருந்தது. மிஸ்பா 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். அப்ரிடி 11 பந்துகளில் தலா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 27 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார். இதற்கிடையே மொகமட் யூசுப் தனது 15ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ஓட்டங்களைக் குவித்தது. மொகமட் யூசுப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 323 ஓட்டங்கள் இலக்குடன் பங்காளதேஷ் அணி விளையாடிய போது, இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின்விளக்குகள் அணைந்தன. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஆட்டத்திலும் பாதிப்பு உண்டானது. அதைத் தொடர்ந்து பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது பங்காளதேஷ் அணி 39 ஓவர்களில் 282 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதன்படி ஆடிய பங்காளதேஷ் அணி பாகிஸ்தான் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 29.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.


